மே தினம் நாம் ஏன் கொண்டாடவேண்டும்?



உழைப்பாளர் தினம் ஏன் கொண்டாடுகிறோம்?
மே 1-ம் தேதி உழைப்பாளர் நாளாகக் கொண்டாடுகிறோம். அது வெறும் விடுமுறை நாள் மட்டுமா?
ஒவ்வொரு கொண்டாட்டத்துக்குப் பின்னாலும் ஒரு வரலாறு இருக்கிறது. இன்றைக்கு நம் அப்பா, அம்மா உள்ளிட்ட அனைவரும் எட்டு மணி நேர வேலைக்குப் போகிறார்கள். நமக்கும்கூட பள்ளி வகுப்புகள் அதிகபட்சமாக எட்டு மணி நேரமே நடக்கின்றன. இந்த எட்டு மணி நேர வேலை முறையை நடைமுறைப்படுத்த பலர் உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கானோர் போராடியிருக்கிறார்கள். அந்தப் போராட்டங்களை நினைவுகூரும் விதமாகவே மே 1-ம் தேதி உழைப்பாளர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. கட்டுப்பாடில்லா வேலை
19-ம் நூற்றாண்டில் தொழிற்சாலைகள், பணியிடங்களில் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நேரம்தான் வேலை பார்க்க வேண்டும் என்று எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தது. ஒரு நிறுவனம் அல்லது முதலாளி எவ்வளவு வேலை வாங்க நினைக்கிறோரோ, அவ்வளவு மணி நேரம் தொழிலாளிகள் உழைக்க வேண்டியிருந்தது. இதனால் தொழிலாளிகள் உடல்நலம் குன்றினர், தொடர்ந்து வேலை பார்க்க முடியாமல் திணறினர், பலர் இறந்தும் போனார்கள்.
இந்தப் பின்னணியில் தொழிலாளர் உரிமைகளை காக்கும் வகையில் சோஷலிச, கம்யூனிச இயக்கங்களே எட்டு மணி நேர வேலையை வலியுறுத்திப் போராடின. ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை, எட்டு மணி நேரம் பொழுதுபோக்கு, எட்டு மணி நேரம் ஓய்வு என்ற கொள்கையை வலியுறுத்தி 1880-களில் தொழிற்சங்க இயக்கங்கள் தீவிரமாகப் போராட ஆரம்பித்தன.
ஹேமார்கெட் சம்பவம்


அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் 1886-ல் மே 3-ம் தேதி எட்டு மணி நேர வேலையை வலியுறுத்திய தொழிலாளர்களை காவல்துறை கொன்றது. அதை கண்டிக்கும் வகையில் ஹேமார்கெட் பகுதியில் தொழிலாளர்கள் அமைதியாகப் பேரணி நடத்தினர். அந்தப் பேரணியில் குண்டு வீசப்பட்டது. அதேநேரம் தொழிலாளர்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் இந்த ஹேமார்கெட் சம்பவத்தை நினைவுகூரும் வகையிலேயே உழைப்பாளர் நாள் மே 1-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஃபிரெஞ்சு சோஷலிச கட்சி, மே 1-ம் தேதியை உழைப்பாளர் நாளாகக் கொண்டாட அழைப்பு விடுத்தது. 1904-ல் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற சர்வதேச சோஷலிச மாநாடு, மே 1-ம் தேதியை உழைப்பாளர் நாளைக் கொண்டாட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியது. இப்படித் தொடர் போராட்டங்களுக்குப் பிறகே எட்டு மணி நேர வேலை என்ற நடைமுறை வந்தது.

இந்தியாவில் மே நாள்


மே தினம் அல்லது உழைப்பாளர் நாள் இந்தியாவின் முதல்முதலாகக் கொண்டாடப்பட்ட இடம் தமிழகத் தலைநகர் சென்னை. கொண்டாடப்பட்ட ஆண்டு 1923.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு எதிரே இருந்த கடற்கரையிலும், திருவல்லிக்கேணி கடற்கரையிலும் உழைப்பாளர் நாள் கூட்டம் நடைபெற்றது. இன்றைக்கு நாடு முழுக்க இடதுசாரி இயக்கங்கள் பயன்படுத்தும் செங்கொடி இந்தியாவில் முதன்முறையாக இந்த நிகழ்வில்தான் பயன்படுத்தப்பட்டது. மே நாளை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானமும் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தப் பேரணியை ஒருங்கிணைத்தவர் இந்திய தொழிலாளர் விவசாய கட்சியின் மா. சிங்காரவேலர். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுவனர்களில் ஒருவராகவும் அவர் இருந்தார்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை, இந்தியாவின் முதல் உழைப்பாளர் நாள் கொண்டாட்டங்களை நினைவுகூரும் வகையிலேயே உருவாக்கப்பட்டது. இந்தச் சிற்பத்தை வடித்தவர் புகழ்பெற்ற சிற்பி டி.பி. ராய் சௌத்ரி.
80 நாடுகளில் இன்றைக்கு மே நாள் உலகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது. தொழிலாளர்களின் உரிமைகள் உயர்த்திப் பிடிக்கப்பட்டதைக் குறிக்கும் வகையிலேயே உழைப்பாளர் நாள் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு மே நாளின்போதும், தொழிற்சங்கங்களும், தொழிலாளர் அமைப்புகளும் தொழிலாளர் உரிமைகளையும் உழைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி கூட்டங்கள், பேரணிகளை நடத்துகின்றன.
Collected and Posted By  - Nsp

Comments

Popular posts from this blog

மரக்கன்று தாத்தா

Govt to contribute to EPF only for new employees registered till Mar 31, 2019

PF Admin Charges reduced to 0.5% w.e.f. 1 June 2018 also EDLI charge waived