மரக்கன்று தாத்தா

மரக்கன்று தாத்தா 
பெயர்: வேலுச்சாமி தாத்தா... வயது: 86... வேலை: மரக்கன்றுகளை டோர் டெலிவரி செய்வது!
தொடர்புக்கு:8940040926
பெயர்: வேலுச்சாமி தாத்தா... வயது: 86... வேலை: மரக்கன்றுகளை டோர் டெலிவரி செய்வது!
திரும்பிய திசை எங்கும் பனியன் தொழிற்சாலைகளால் சூழப்பட்ட நகரம் திருப்பூர். இரவு - பகல் வித்தியாசமின்றி 24 மணி நேரமும் இயந்திரங்கள் உறுமிக்கொண்டு இருக்கும் இந்நகரத்தை, தனி ஒருவனாய் இயற்கையின் பாதைக்கு அழைத்துச் செல்ல முயல்கிறார் வேலுச்சாமி தாத்தா. "மரக்கன்று" வேலுச்சாமி என்பது இவரின் அடையாளம்.
திருப்பூர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த இந்த 86 - வயது முதியவர் தினமும் குறைந்தது 4,5 மரக்கன்றுகளையாவது தன் மிதிவண்டியின் பின் இருக்கையில், வைத்துக்கொண்டு திருப்பூர் நகர வீதிகளைச் சுற்றி வருகிறார். கண்ணில் தென்படும் காலியான இடங்களில் எல்லாம் அந்த மரக்கன்றுகளை நடுகிறார். நட்டு வைப்பதுடன் இவரது பணி முடிந்துவிடுவதில்லை. அந்த மரக்கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றி, தொடர்ந்து பராமரிப்பதும் இவரே. தன்னுடைய மிதிவண்டியில் இம்மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்து இவர் நட்டு வளர்த்த மரங்கள் ஒவ்வொன்றும் இன்று பிரமாண்டமாய் கிளை பரப்பி நிற்கிறது. தெருக்களில் மட்டுமல்ல. பல வீடுகளில் கொஞ்சம் காலியாக இருக்கும் நிலத்தைக் கண்டுவிட்டாலும், தயக்கமின்றி அந்த வீட்டு உரிமையாளரிடம் சென்று, " உங்க காம்பவுண்டில் கொஞ்சம் காலி இடம் இருக்குதே ! அங்கு ஒரு மரம் வளர்த்து தரட்டுமா என்று ஆர்வமாய் கேட்கிறார். ஒரு சிலர் சம்மதிக்கிறார்கள், இன்னும் சிலர் வேண்டாம் என்றுகூறி வெளியேற்றுகிறார்கள். இருப்பினும் வேலுச்சாமி அய்யாவின் ஆர்வம் குறைந்ததில்லை. இன்னும் பல வீடுகளின் காம்பவுண்டு கதவுகளைத் தட்டிக்கொண்டிருக்கிறார். இப்படி அவர் வீடு வீடாகச் சென்று வளர்த்துக் கொடுத்த மரங்கள் அனைத்தும், இப்போது ஏராளமான வீடுகளுக்கு உயிரோட்டமுள்ள காற்றையும், காய் கனிகளையும் அள்ளித் தந்துகொண்டே இருக்கின்றன.
5 மரங்களை நட்டுவிட்டு, 50 அடி பிளக்ஸ் பேனரில் சிரிக்கும் சுயநலக்காரர்களுக்கு மத்தியில், இந்த மனிதர் " பல நூறு வீடுகளில், தெருக்களில், நெடுஞ்சாலைகளில், பேருந்து நிறுத்தங்களில், கோயில்களில், பள்ளிக்கூடங்களில் என நட்டு வளர்த்து இம்மண்ணுக்கு அர்ப்பணித்த மரங்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தாண்டும். அதிலும் நாட்டு மரங்கள் மட்டும்தான் வேலுச்சாமி அய்யாவின் விருப்பம்.
தன் வீட்டையொட்டி இருக்கும் 4 சென்ட் நிலத்திலும்கூட, " வேம்பு, நொச்சி, இலுப்பை, முருங்கை, புங்கை, பப்பாளி, அத்தி, நாவல் மற்றும் மாதுளை மரங்களும், ஏராளமான மூலிகை செடிகளையும் வளர்த்துக்கொண்டு இருக்கிறார். " நம் மண்ணுக்கேத்த மரங்களைத்தான் வளர்க்கணும் தம்பி. இந்தப் பூமி மலடாயிட்டு இருக்கு. இயற்கையும், சுற்றுச் சூழலும் கெட்டுப்போனதுதான் இதுக்கு காரணம். வேலைக்குப் போறோம்.... ராப்பகலா உழைக்கிறோம்னு கான்கிரீட் கட்டிடங்களுக்குள்ள போய் எல்லாரும் முடங்கிட்டாங்க. தப்பில்லை. அதுக்காக அடுத்த தலைமுறையை பத்தி கொஞ்சமும் யோசிக்க வேணாமா..? காசு பணம் மட்டும்தான் தேவைன்னு ஓடிட்டு இருக்குறதாலதான், காற்றைக்கூட விலைக்கு வாங்குற நிலைமை வந்துருக்கு. இன்னைக்கும் நான் என் சைக்கிள்ல மரக்கன்றை வைச்சு எடுத்துட்டு போகும்போதும், எங்கயாவது நின்னு செடியை நடக் குழி தோண்டிக்கிட்டு இருக்கும்போதும், அந்த வழியாகப் போற ஒருசிலர், இந்த ஆளுக்கு வேற வேலையே இல்லையா? எப்ப பார்த்தாலும் இப்படியே திரியுறாருன்னு காதுபட ஏளனமா பேசுவாங்க. அவங்களைத் திரும்ப கூப்பிட்டு, ஆமாங்கன்னு.. இது மட்டும்தான் என் வேலைன்னு அன்பா சொல்லியனுப்புவேன்.
ஒரு சிலருக்கோ, மரம் வளர்க்க ஆசை இருந்தாலும், நகரத்துக்குள்ள வீட்டைச் சுற்றி மின்சாரக் கம்பிகளும், கேபிள் ஒயர்களுமா இருக்கு!, ஏதாவது இடைஞ்சலாகும்னுதான் தயங்குறோம்னு சொல்றாங்க. நியாயம்தான். ஆனால் அதுக்கும் வழி இருக்கு. கவை கம்பை கயிறு மூலம் மரத்தில் கட்டி, மின்கம்பிக்கு இடையூறு இல்லாமலும், போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலும் மரத்தை வளைத்தவாறு வளர செய்ய முடியும். அப்போதும் சந்தேகம் இருந்தால் என்னை கூப்பிடுங்கள். நானே விதையோடு வந்து, உங்கள் இடத்தில் யாரையும் பாதிக்காத வகையில் மரம் வளர்த்துக் தருகிறேன். மரம் வளர்க்க முடியலையேன்னு ஆளுக்கு ஆயிரம் காரணம் சொல்லலாம். ஆனால் மரம் வளர்க்க வேண்டும் என்பதற்கு ஒரே ஒரு காரணம் போதும். மரம் நம் "உயிர்" என்றார் தீர்க்கமாக.
தொடர்புக்கு:8940040926.
Collected By  - Nsp
Source from : - https://www.vikatan.com/news/tamilnadu/122570-story-of-the-tree-man-velusamy-who-delivers-tree-saplings-to-all.html.

Comments

Popular posts from this blog

Interest Rate likely down from 8.65% to 8.55%